அகிலம்

அகிலம் ஒரு முழுமையான கற்றல், கற்பித்தல் களஞ்சியம். தமிழகத்திலுள்ள பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் பயன்பெறும் வகையில் கட்டற்ற கல்வி வளங்களையும் (OER) கருவிகளையும் வழங்கும் உன்னத அமைப்பு இது. இதன் வாயிலாக ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் தேவை அறிந்து பொருண்மைக்கேற்றவாறு பாடங்களை அமைத்திடவும் பிற ஆசிரியர்கள் உருவாக்கிய பாடங்களைப் பயன்படுத்திடவும் அகிலம் ஒரு முழுமையான கற்றல் கற்பித்தல் மேடையாகத் திகழும்.

கற்றலும், கற்றலை அளவீடு செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆசிரியர்களுக்கான ஒப்பற்ற வளங்கள் நிறைந்த தளமாக அமைந்திருப்பது மட்டுமல்லாது மதிப்பீட்டையும் முழுமையாக்குகின்ற தளமாக அகிலம் விளங்கும். இவ்விரண்டு செயல்களையும் ஒரு சேர செய்வது வளரறி மதிப்பீட்டின் இன்றியமையாத் தன்மையாகும், அகிலம் இதை முழுவதுமாக செயல்படுத்தும்.

அது மட்டுமல்லாது ஆசிரியர் பயிற்சி முறைகள், கற்றல்-கற்பித்தல் முறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே வைத்துள்ளது அகிலம்.

கலைத்திட்டத்துடன் தொடர்புபடுத்திய அனைத்து வளங்களையும் திறன்பேசி, கணினி வாயிலாக இணையத்தொடர்பு எதுவும் தேவையின்றி அகிலம் ஆசிரியர்களுக்கு வழங்கும்.

மத்திய மனித வளத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் தமிழ்நாடு இணைந்திருப்பதன் மூலமாக கீழ்க்காணும் நலன்களை மாநில ஆசிரியர்கள் பெற இயலும்.

  • தரமான பணியிடைப் பயிற்சியை எந்நேரமும் எவ்விடத்திலும் பெற முடியும்
  • கலைத்திட்டத்துடன் தொடர்புடைய வளங்களை ஆசிரியர்கள் உருவாக்கிப் பயன்படுத்த முடியும்
  • ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு மாணவ ஆசிரியர்களால் வெற்றி பெற முடியும்.
  • வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களால் தகுந்த கருவிகளைப் பயன்படுத்தி தேவைப்படும் பயிற்சிகளை இனங்காண முடியும்.
  • ஆசிரியர்களால் தாங்கள் பெற்ற பயிற்சிகளை ஒருங்கிணைத்து சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

Vision